ஒரே நாடு ஒரே சட்டம்; மனோகணேசன் கூறியது
இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது.
எனினும் இந்த செயலணியில் தமிழ் பிரதிநிதிகள் யாரும் உள்வாங்கப்படாமை தொடர்பில் பெருமளவில் கண்டனங்கள் எழுந்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ள மனோகணேசன்,
ஞானசாரர் குழுவில் தமிழ் உறுப்பினர் இல்லை என சுட்டிக்காட்டியது, அதில் தமிழரை நியமியுங்கள் என்பதற்காக அல்ல. இக்குழுவில் எமக்கு நம்பிக்கை இல்லை.
ஆனால், "ஒரு நாடு" என்று சொல்லி விட்டு, அதில் கூட தமிழருக்கு இடம் கொடுக்க இந்த அரசுக்கு அக்கறை இல்லையே, அவ்வளவுக்கு வெறுப்பு மற்றும் அலட்சியமா என்றும் கேட்டு இருந்தேன்.
அதேபோல் முஸ்லிம் உறுப்பினர்களின் நியமனம் இஸ்லாமிய சகோதரர் மீது விசேட பாசம் என்பதால் அல்ல என்றும், “அவர்களை” பக்கத்தில் "வைச்சு செய்யத்தான் முஸ்தீபு" என்றும் கூறியிருந்தேன்.
ஞானசாரர் தலைமையில் குழு என்றால், யாரை நியமித்து என்ன பயன்?, "..பையை திறக்காமலேயே பைக்குள் என்ன இருக்கிறது என புரிகிறது.." எனவும் கூறியிருந்தேன்.
இதை ஏன் இப்போ மீண்டும் கூறுகிறேன் என்றால், இக்குழுவில் தமிழரை நியமிக்க ஜனாதிபதியை இணங்க செய்து விட்டோம், சாதித்து விட்டோம், என அரசுக்குள் இருக்கும் “செந்தமிழர்” சிலர் இப்போது சொல்லுவார்கள். அதான் எனவும் அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
ஒரே நாடு ஒரே சட்டம் ; செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி உடன்பாடு