ஆன்லைன் முதலீடு ஆசை வார்த்தை கூறி 70 வயது முதியவரிடம் ரூ.12 லட்சம் மோசடி
இந்தியாவில் ஆன்லைன் முதலீடு ஆசை வார்த்தை கூறி சென்னையை சேர்ந்த முதியவரிடம் ரூ.12 லட்சம் சுருட்டிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
70 வயது முதியவரிடம் முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று வந்திருந்த கவர்ச்சிகர விளம்பரத்தை நம்பி 6 தவணைகள் மூலம் ரூ.12 லட்சத்தை முதலீடு செய்தார்.
மோசடி கும்பல் விரித்த மாய வலையில் சிக்கி பணத்தை இழந்திருப்பதை உணர்ந்த அவர், இந்த மோசடி சம்பவம் குறித்து தேசிய 'சைபர் கிரைம்' இணையதளத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.

பின்னர் அந்த ஒப்புகை சீட்டுடன், சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் பொலிஸ் நிலையத்தில் கடந்த மாதம் 22-ந் திகதி அன்று முறைபாட்டை அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த மோசடி கும்பலை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் வடபழனியை சேர்ந்த வளவன் (49), சாலிகிராமத்தை சேர்ந்த சுமி (43) என்ற பெண் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் (29) ஆகிய 3 பேரை திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தனிப்படை பொலிஸார் கைது செய்தனர்.
சாரணையில், வளவன், சுமி ஆகியோர் அறப்பணி ஆன்மிக அறக்கட்டளை என்ற பெயரில் பல வங்கிகளில் கணக்குகளை தொடங்கி சைபர் மோசடி மூலம் பெறப்படும் பணத்தை பெற்று வந்துள்ளனர்.
மேலும் சைபர் குற்றவாளிகளுடன் கைக்கோர்த்து கமிஷன் பெற்று பண பரிவர்த்தனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்கள் பயன்படுத்தி வந்த 3 தனியார் வங்கி கணக்குகள் மீது ‘தேசிய சைபர் கிரைம்' இணையதளத்தில் 138 புகார் மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதாகி உள்ள கார்த்திகேயன் மீது வேப்பேரி, விருகம்பாக்கம், அம்பத்தூர் ஆகிய பொலிஸார் நிலையங்களில் சுமார் 7 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்து உள்ளனர்.