பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்ட முதியவரின் உடல்! அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்
சீனாவின் வர்த்தக தலைநகரான ஷாங்காயில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், அங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கை என்கிற பெயரில் பல மனித உரிமை மீறல்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் ஷாங்காய் நகரின் புட்டுவோ மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறித்து அங்கு சென்ற அதிகாரிகள் முதியவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தாமல் அவரது உடலில் துணியை சுற்றி பிணவறைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் முதியவரின் உடலில் சுற்றியிருந்த துணியை விலக்க முயன்றபோது, முதியவரின் உடல் அசைந்துள்ளது.
இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் முதியவரை பரிசோதித்ததில் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது அவர் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுகாதார அதிகாரிகள் 4 பேரை ஷாங்காய் நிர்வாகம் பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.