கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் நிர்வாக சேவை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்
கல்விச் சீர்திருத்தங்களை வெறும் அரசியல் பிரச்சினையாக மாற்றாமல், தேசத்தின் எதிர்காலம் கருதிய தேசியப் பொறுப்பாகக் கருதி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்களில் பெரும்பாலானவை, அறிவியல் ரீதியானவை அல்ல என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல் இலாபம்
இவை வெறும் அரசியல் இலாபத்திற்காகவும், குறுகிய கால புகழுக்காகவும் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் எனத் தெரிவித்துள்ள சங்கம், இவ்வாறான போக்கு ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்காலத்திற்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.
உலகளாவிய தரநிலைகளின்படி, பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் முறைகள் குறைந்தது எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது புதுப்பிக்கப்பட வேண்டும்.
ஆனால், இலங்கையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பாடத்திட்டங்கள் மாற்றப்படாமல் இருப்பது மாணவர்களின் அறிவு, திறன் மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனை வளர்ச்சியைப் பாதித்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ள சங்கம், பின்வரும் விடயங்களை வலியுறுத்தியுள்ளது. எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் நாட்டின் நீண்டகால வளர்ச்சியை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.
ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகள் மூலம் இந்தச் சீர்திருத்தச் செயன்முறையை வலுப்படுத்த சங்கம் தயாராக உள்ளது. இந்தச் சீர்திருத்தங்கள் முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டியவை அல்ல. மாறாக, தொழில்முறை அனுபவங்களைக் கொண்டு மேலும் மெருகூட்டப்பட வேண்டிய ஒரு "இயக்கவியல்" செயன்முறையாகும்.
கல்வித் துறையை அரசியல் போர்க்களமாக மாற்றுவதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை, மாறாக நாட்டின் எதிர்கால சந்ததியினரே பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதை அனைத்துத் தரப்பினரும் பொறுப்புடன் உணர வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.