காதலர் தினத்தை முன்னிட்டு விசித்திர விளம்பரம் ; அதிகாரிகள் கண்டனம்
காதலர் தினத்தை முன்னிட்டு 'மது (Wine) வாங்கினால் பீர் இலவசம்' என்ற விளம்பரப் பிரசாரத்தை முன்னெடுத்த மதுபான விற்பனை நிலையத்தின் மீது இந்தியாவின் புதுச்சேரி மாநில மதுவரி திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறிப்பிட்ட வகை மது போத்தல்களை வாங்கும்போது ஒன்று அல்லது நான்கு பீர் கேன்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற இந்தச் சலுகையானது, 1970ஆம் ஆண்டின் புதுச்சேரி மதுவரி விதிகளுக்கு முரணானது என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மது அருந்துவதை ஊக்குவிக்கும் வகையிலான இத்தகைய விளம்பரங்கள் நேரடி விதிமீறல் எனக் குறிப்பிட்ட வருவாய்த்துறை அதிகாரி ஒருவர், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு விளக்கம் கோரும் அறிவித்தல் அனுப்பப்படும் என்றும், ஒரு இலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

குறித்த மதுபான நிலைய உரிமையாளர் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக இந்தச் சலுகையை விளம்பரப்படுத்தியதைத் தொடர்ந்து அதிகாரிகள் இந்தச் சோதனையை முன்னெடுத்தனர்.
சோதனையின் போது கடையின் உட்புறத்தில் விளம்பரப் பலகைகள் எதுவும் காணப்படவில்லை என்றாலும், பொதுவெளியில் முன்னெடுக்கப்பட்ட விளம்பரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு அதிகப்படியான மது நுகர்வைத் தூண்டும் வகையில் இவ்வாறான உத்திகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ள அதிகாரிகள், மதுபான விற்பனை நிலையங்களைத் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.