இலங்கையில் இரண்டு பெண்களை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்!
நாட்டில் அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலை வழங்குவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய இரு பெண்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் தென் கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 3 பேரிடம் தலா 5 இலட்சம் வீதம் 15 இலட்சம் ரூபாவும், இத்தாலியில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி மற்றுமொரு நபரிடம் 730,000 ரூபாவையும் மோசடி செய்துள்ளார்.
இதேவேளை, உறுதி அளித்தபடி வெளிநாட்டில் தொழில் வழங்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைத்த 4 முறைப்பாடுகள் தொடர்பில் கண்டியில் வசிக்கும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் வழக்கு ஒன்றுக்காக 10 இலட்சம் ரூபா சரீர பிணைகள் இரண்டு மற்றும் 4 வழக்குகளுக்காக தண்டனை அறிவிக்கப்பட்டு பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, 5 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு டுபாயில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் படி, கலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கலகெதர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு எதிரான முறைப்பாடுகள் பணியகத்திற்கு தொடர்ந்து கிடைத்து வருவதாகவும், முறைப்பாடுகளை ஆராய்ந்த பின்னர் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.