வரலாற்று சிறப்பு மிக்க நுவரெலியா தபால் நிலையத்தில் இடிதாங்கி திருட்டு
வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா தபால் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த செம்பு இணைப்புகள் திருடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன், இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்
இதனையடுத்து, நுவரெலியா பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும் இணைந்து இன்று (22) வெள்ளிக்கிழமை நுவரெலியா பிரதான தபால் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
பழமையான இந்தக் கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி, மின்னல் தாக்குதலிலிருந்து கட்டிடத்தைப் பாதுகாக்கும் அறிவியல் கருவியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
குறிப்பாக கட்டிடத்தின் கடிகாரக் கோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி , மின்னலின் மின்சாரத்தை ஈர்த்து பாதுகாப்பாக நிலத்திற்குள் செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இடிதாங்கி திருடப்பட்டுள்ளதால், நுவரெலியாவில் நிலவும் கடுமையான மழை மற்றும் இடி மின்னல் காலநிலையின்போது, தபால் நிலையக் கட்டிடத்திற்கும் அப்பகுதி மக்களுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இடிதாங்கிகளில் பயன்படுத்தப்படும் செம்பு போன்ற உலோகங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், சமூக விரோதிகளின் குறிவைப்பாக மாறிவருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகள் மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.