நான்கு பேருக்கு மரண தண்டனை விதித்த நுவரெலியா மேல் நீதிமன்றம்; நீதிமன்ற வளாகத்தில் விபரீதம்
நுவரெலியா மேல் நீதிமன்றம் , நேற்றைய தினம் (29) நான்கு பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக நீடித்த நீண்ட நெடிய வழக்கு விசாரணைகளின் முடிவிலேயே, மேல் நீதிமன்ற நீதிபதி விஜேராஜ் ஜெயசூரிய இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் விபரீதச் சம்பவம்
தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விபரீதச் சம்பவம் ஒன்றும் அரங்கேறியுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர், தீர்ப்பு அறிவிக்கப்பட்ட உடனேயே நீதிமன்றத்தின் சிறைச்சாலையிலுள்ள கழிவறைக்குள் சென்று ரகசியமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சிறை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்த அவர், உயிரை மாய்க்க முற்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவசரமாக நூவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றவர் உடுபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஆவார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது சொந்த மனைவியைக் கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்காகவே மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
இதேவேளை, தீர்ப்பளிக்கப்பட்ட மற்றுமொரு வழக்கில், கடந்த 2010 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட கொலைக் குற்றம் தொடர்பாக 75 வயதுடைய முதியவர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கினிகத்தேன கெனில்வொர்த் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபருக்கு, 2000 ஆம் ஆண்டில் செய்த கொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நான்காவது வழக்காக, வலப்பனை தெரிபஹ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபருக்கு கடந்த 1997 ஆம் ஆண்டே மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அவரது மரண தண்டனையை நூவரெலியா மேல் நீதிமன்றம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.