ஓடி ஒழிந்த மனைவி; அயல்வீட்டு இளம் பெண் மீது கைவைத்த NPPஉறுப்பினர் கைது!
கலென்பிந்துனுவெவ பிரதேச சபையைச் சேர்ந்த, 'தேசிய மக்கள் சக்தி' கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர், தனது மனைவியை தாக்கிய நிலையில் அதை தடுக்க முயன்ற அண்டை வீட்டு இளம்பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மொரகொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கை 22-ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்டது. சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர், மொரகொட பகுதியில் வசிக்கும் இருபத்தைந்து வயதுடைய ஒரு பெண் ஆவார்.

அயல்வீட்டில் தஞசமடைந்த மனைவி
குறித்த பிரதேச சபை உறுப்பினரின் தாக்குதலால் பெண்ணின் உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர், அவரது மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் ஆகியோர், பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு அருகிலேயே அமைந்துள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
காவல்துறையின் தகவல்களின்படி, அந்த உறுப்பினருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை முற்றிய நிலையில், மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் பாதுகாப்பு கருதி அண்டை வீட்டில் வசிக்கும் இளம்பெண்ணின் வீட்டிற்குச் சென்று தஞ்சம் புகுந்துள்ளார்.
தனது மனைவியும் குழந்தைகளும் அண்டை வீட்டில் இருப்பதை அறிந்த அந்த உறுப்பினர், பலவந்தமாக அந்த வீட்டிற்குள் நுழைந்து தனது மனைவியைத் தாக்க முயன்றுள்ளார்.
இதன்போது இளம்பெண் குறுக்கிட்டபோது, சந்தேகத்திற்குரிய அந்த உறுப்பினர் தன்னைத் தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ காவல்துறையினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.