வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்ல, எதுக்கு இத்தனை கேமரா? கடுப்பான திருடன் எழுதிய கடிதம் வைரல்!
பெரிய வீடு, வீட்டை சுற்றி கண்காணிப்பு கேமரா இத்தனையும் இருந்த வீட்டில் திருட சென்ற திருடனுக்கு ஒரு ரூபாய் கூட அங்கு இல்லாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில், கடுப்பான திருடன் "வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்ல, எதுக்கு இத்தனை கேமரா? கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் தமிழகத்தின் நெல்லையை அடுத்த பழைய பேட்டையை சேர்ந்தவர் ஜேம்ஸ்பாண்ட். இவர் குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டை நோட்டமிட்ட திருடன் ஒருவன், பெரிய வீடு, வீட்டை சுற்றி கண்காணிப்பு கேமரா இருப்பதை வைத்து, வீட்டில் நகை, பணம் நிறைய இருக்கும் என்று மணக்கணக்கு போட்டுள்ளான்.

யாரையும் ஏமாற்ற வேண்டாம் காசு வைக்கவும்
கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் வீட்டிற்குள் லாவகமாக உள்ளே நுழைந்த திருடன், வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து உள்ளே உள்ள லாக்கரில் நகை, பணத்தை தேடியுள்ளான்.
ஆனால், அங்கு ஒரு ரூபாய்கூட உள்ளே இல்லை என கண்டு கடுப்பான திருடன், வீட்டு உரிமையாளருக்கு கடிதம் ஒன்றை எழுதிவைத்துள்ளான். நான்கு பக்கக் கடிதம் ஒன்றில்,
வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. அடுத்த தடவை என்னை மாதிரி திருடன் வந்தால் யாரையும் ஏமாற்ற வேண்டாம். காசு வைக்கவும். எதற்கு இத்தனை கேமரா? போங்கடா வெண்ணைகளா…என்னை மன்னித்து விடுங்கள். இப்படிக்கு திருடன் என்று எழுதி அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.
இந்த நிலையில், குடும்பத்தினருடன் வீடு திரும்பிய ஜேம்ஸ்பாண்ட், வீட்டிற்குள் திருடன் வந்து சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். திருடன் எழுதிவைத்த கடிதத்தையும் பார்த்து திகைத்து போனார்.
உடனே இதுகுறித்து பழையபேட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், திருடனின் கேரேகை பதிவை எடுத்துச் சென்று, திருடனை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருட வந்த இடத்தில் இப்படி ஒரு ரூபாய்கூட இல்லாத விரக்தியில் திருடன் எழுதிவைத்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.