புலம்பெயர்ந்தோரிடம் கையேந்தும் வடக்கு பாடசாலைகள்; ஆளுநர் சீற்றம்!
வடக்கில் உள்ள பாடசாலைகள் சில வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களிடம் பாடசாலை அபிவிருத்திக்கென நிதியை கேட்பது தொடர்பில் வடமாகாண ஆளுநர் நா வேதநாயகன் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
இலங்கையை பொறுத்தவரை இலவச கல்வியே அரசாங்கம் மாணவர்களுக்கு கொடுத்து வருவதுடன், பாடசாலைகளின் அபிவிருத்திகளையும் தேவைக்கு முக்கியத்தும் அளித்து நிறைவேற்றி வருகின்றது.
சின்ன விடயங்களைக்கூட வெளியாட்களிடம் எதிர்பார்ப்பு
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் (19 நடைபெற்றது. கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
புதிதாக நியமிக்கப்பட்ட இளம் அதிபர்களின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கனவாக உள்ள நிலையில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.
அதோடு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அடிக்கடி பாடசாலைகளுக்கு களப் பயணம் மேற்கொள்ளவேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.
களப் பயணத்தின்போது பாடசாலைகளின் தேவைப்பாடுகளை கண்டறிய வேண்டும் என கூறிய ஆளுநர் , சில பாடசாலைகள் நேரடியாக வெளியாட்களிடம் உதவிகளைக் கேட்கின்றதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதுமட்டுமல்லாது அரசாங்கத்தின் நிதியுதவியில் செய்யக் கூடிய சின்ன விடயங்களைக்கூட பாடசாலை சமூகம் வெளியாட்களிடம் கேட்பதாகவும் ஆளுநர் விசனம் வெளியிட்டார்.
அதேவேளை யாழ் மாவட்டத்தில் உள்ள கிராமபுற சில பாடசாலைகளிற்கு வெளிநாடுகளில் இருபோரிடம் நிதி கேட்பதும், அவர்களை முன்னிலைப்படுத்தி நிகழ்வுகளை நடத்துவது தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் விசனங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது தாங்கள் கஸ்ரப்பட்டு சேர்த்த காசை பாடசாலை பிள்ளைகளின் தேவைக்கு கேட்கின்றார்களே என கொடுத்தால் , சில பாடசாலைகள் அதனை வீணாக செலவு செய்கின்றார்கள் என சில புலம்பெயர் தமிழ் உறவுகளும் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தி வேதனை வெளியிட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.