யாழில் காணி உரிமையாளர்களது கோரிக்கைக்கேற்ப வடக்கு மாகாண ஆளுநர் பேச்சு வார்த்தை
யாழ். தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், காணியின் உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்தியிருந்தார்.
இந்தச் சந்திப்பின்போது விகாரை தற்போது அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என்றும் அது தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் இதன்போது சமர்ப்பித்திருந்தனர்.
திஸ்ஸவிகாரைக்குரிய காணி பிறிதொரு இடத்தில் அமைந்துள்ளது என்பதையும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர்.
விகாரை தற்போது அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாகவும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த காணி உரிமையாளர்கள் அந்தக் காணியை விடுவித்துத் தருவதுடன், விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்கவேண்டும் எனக் கோரியிருந்தனர்.
காணி உரிமையாளர்களது கோரிக்கைக்கு அமைவாக இது தொடர்பில் விகாராதிபதியுடனும், நயினாதீவு விகாரையின் விகாராதிபதியுடனும் ஆளுநர் பேச்சு நடத்திவருகின்றார்.
அத்துடன் இந்த இணக்கப்பாடு யோசனை தொடர்பில் புத்தசாசன அமைச்சின் கவனத்துக்கும் கொண்டு செல்வதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்திருக்கின்றார் என வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது