யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வடக்கு ஆளுநரின் அறிவிப்பு!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சூழலை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
பலாலிக்கு விஜயம் செய்திருந்த வடமாகாண ஆளுநர் விமான நிலையத்தின் சூழலை களஆய்வு செய்திருந்ததுடன் , அங்கு முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலான செயற்றிட்டங்கள் குறித்து ஆராய்ந்திருந்தார்.
அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
பலாலியில் உள்ள சர்வதேச விமானநிலையத்தின் சூழலை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். குறிப்பாக, அப்பகுதியில் வடிகால்கள், வாகனத் தரிப்பிடங்கள், ஓய்வுப்பகுதிகள், நடைபாதைகள், மருத்துவமனை வசதிகள், சூரியசக்தி மின்சார ஒளிவிளக்குள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படவுள்ளன.
இந்தச்செயற்றிட்டங்கள் அனைத்தும் சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
மேலும், சுற்றுலாப்பயணிகளைக் கவரும் பொருட்டு இந்த வடிவமைப்புக்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், இச்செயற்றிட்டங்களின் பின்னர் அப்பகுதியை பொதுமக்கள் முறையாக பராமரிப்பதும் அவசியமானதாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.