குடியேற்றமற்ற விசா; இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்த எச்சரிக்கை!
வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வருகை தந்து, அமெரிக்க குடிமக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கக் குடிமக்களின் வரிப்பணத்திலிருந்து நிதியளிக்கப்படும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தும் அல்லது அவற்றைச் சார்ந்திருக்கும் நபர்கள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்
இவ்வாறான சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தும் குடியேற்றமற்ற விசா (Non-immigrant visa) வைத்திருப்பவர்களின் விசாக்கள் உடனடியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு விசா ரத்து செய்யப்படுவதுடன், அத்தகைய நபர்கள் எதிர்காலத்தில் அமெரிக்க விசாக்களைப் பெறுவதற்கும் தகுதியற்றவர்களாகக் கருதப்படலாம்.
எனவே அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் நபர்கள், அங்கு தங்கியிருக்கும் காலப்பகுதியில் தங்களின் செலவுகளைத் தாங்களே பொறுப்பேற்பதற்கான நிதி வசதியைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் அமெரிக்காவுக்குப் பயணம் செய்பவர்கள் அந்த நாட்டின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதிசெய்யும் நோக்கில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.