ஐக்கிய அரபு இராச்சியத்தின் உன்னதப் பணி நிறைவு ; தாயகம் திரும்பிய நிவாரணக் குழுவினர்
சமீபத்தில் நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையை தொடர்ந்து, ஐக்கிய அரபு இராச்சியம் மேற்கொண்ட மனிதாபிமானப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் நிவாரணக் குழுவினர் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் நேரடி உத்தரவுகளின் கீழ், பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்காக இந்த அவசரகால நிவாரணத் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த மனிதாபிமானப் பணியின் போது, ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிவாரணக் குழுக்கள் உணவுப் பொருட்கள், கூடாரங்கள், தங்குமிடத்திற்கான பொருட்கள் மற்றும் நிவாரணப் பொதிகள் உள்ளிட்ட 116 மெட்ரிக் டன் மனிதாபிமான உதவிகளை வழங்கின.
இது, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமத்தைக் குறைக்கும் நோக்குடன் வழங்கப்பட்டது.
இதேவேளையில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து சிறப்பு கள நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் விளைவாக, காணாமல் போன 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன, மேலும் லேசான காயங்களுடன் காணப்பட்ட 8 பேருக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு இராச்சிய நிவாரணக் குழுவின் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கை மற்றும் ஏனைய நாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க ஐக்கிய அரபு இராச்சியம் உறுதிபூண்டுள்ளது என்று கூறினார்.