10,000 வீரர்கள், பல போர்க்கப்பல்கள்; 24 மணிநேரம் ஹோர்மூஸ் நீரிணையை எந்த கப்பலும் கடக்கவில்லை !
ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா அமுல்படுத்தியுள்ள கடற்படை முற்றுகையை, முதல் 24 மணிநேரத்தில் எந்தக் கப்பலும் மீறி கடந்து செல்லவில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வரும் United States Central Command (CENTCOM), முற்றுகை நடவடிக்கைகள் கடுமையாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

10,000 வீரர்கள், பல போர்க்கப்பல்கள்
இந்த கடற்படை நடவடிக்கையில் 10,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள், பல போர்க்கப்பல்கள் மற்றும் இராணுவ விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக CENTCOM தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் கடுமையான கண்காணிப்பும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்கப் படைகளின் உத்தரவின்படி, ஆறு வணிகக் கப்பல்கள் தங்களது பயணத்தை நிறுத்தி, வழித்தடத்தை மாற்றி மீண்டும் ஈரானியத் துறைமுகங்களுக்கே திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிபிசி சரிபார்த்த கண்காணிப்புத் தரவுகளின்படி, முற்றுகை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், ஈரானுடன் தொடர்புடைய நான்கு கப்பல்கள் Strait of Hormuz வழியாக கடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், முற்றுகை முழுமையாகச் செயல்பட்டு வருவதாக அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்துகிறது. ஈரானியத் துறைமுகங்களுக்கு செல்லும் அல்லது அங்கிருந்து வரும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த முற்றுகை அமுல்படுத்தப்படுவதாக CENTCOM தெரிவித்துள்ளது.
அதேவேளையில், ஈரானுடன் தொடர்பில்லாத கப்பல்களின் “கடற்பயணச் சுதந்திரம்” (Freedom of Navigation) பாதுகாக்கப்படும் எனவும் அமெரிக்கா உறுதியளித்துள்ளது.