IPL ஆரம்பப் போட்டிகளில் பத்திரண இல்லை ; ரசிகர்களுக்கு அதிர்ச்சி
2026ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி தனது நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரணவின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
உபாதை காரணமாக அவர் தொடரின் ஆரம்பக் கட்டப் போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற ஏலத்தில் 18 கோடி இந்திய ரூபாவுக்கு கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணியால் வாங்கப்பட்ட மதீஷ பத்திரண, தற்போது உபாதை காரணமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (SLC) கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தநிலையில் கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் அபிஷேக் நாயர் வழங்கிய தகவலின்படி, ஏப்ரல் நடுப்பகுதியில் பத்திரண முழுமையான உடற்தகுதியைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே ஹர்ஷித் ரானா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் உபாதை காரணமாக இந்த முழுத் தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
செம்பியன் பட்டத்தை வென்ற சீசனில் முக்கிய பங்காற்றிய ஹர்ஷித் ரானாவின் இல்லாமை அணிக்கு ஒரு "பெரிய அடி" என பயிற்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஹர்ஷித் ரானாவுக்குப் பதிலாக பொருத்தமான ஒரு பந்துவீச்சாளரைத் தெரிவு செய்யும் பணியில் அணியின் தலைமைத்துவம் தற்போது ஈடுபட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் போட்டியில் மார்ச் 29ஆம் திகதி வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.