முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் இந்து கோவில் சான்று இல்லையாம்! பறிபோகும் தமிழர் வழிபாட்டிடம்
முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் வெளிப்படவில்லை என பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு மேலதிக செயலாளர் (நிர்வாகம்) தேசிய மரபுரிமைகள் பிரிவின் ஊடாக, பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் விக்கிரமசிங்க விடுத்துள்ள அறிவிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் வெளிப்படவில்லை
அவர் விடுத்துள்ள அறிவிப்பில் , முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரையின் மறுசீரமைப்பு என்ற போர்வையில், ஐயனார் கோவிலை தொல்பொருள் மரபுரிமை சிதைவடையும் வகையில் புனரமைப்பது தொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக
மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக உங்களால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட, உங்களது இல. MBRCA/07/வேறு மற்றும் 2026.03.20ஆம் திகதியிட்ட கடிதத்துடன் தொடர்புடையது.
அதற்கமைய, எனது இதே இலக்கத்தைக் கொண்ட மற்றும் 2026.03.30 ஆம் திகதியிடப்பட்டு முல்லைத்தீவு பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மூலம், மேற்குறிப்பிட்ட குருந்தூர்மலை விகாரை அமைந்துள்ள நிலமானது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த சான்றுகளைக் கொண்ட ஒரு இடமாகும் எனவும், அங்கு ஒரு இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் வெளிப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1940 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் பிரகாரம், தொல்பொருள் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பிற்குள் ஏதேனும் ஒரு புதிய கட்டடத்தையோ அல்லது நிர்மாணத்தையோ மேற்கொள்வது சட்டவிரோதமானது என்பதுடன், அது 34 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, அத்தகையதொரு பௌத்த மதத் தலத்துக்குள் ஒரு இந்து கோவிலை நிர்மாணிப்பதன் மூலம், ஏதேனும் ஒரு தரப்பினரால் புனிதமாகவும் கௌரவத்துடனும் மதிக்கப்படும் ஒரு குழுவினரை தூண்டும் வகையில் செயல்படுவது, மேற்கூறிய கட்டளைச் சட்டத்தின் 31 (ஆ) பிரிவின் கீழ் ஒரு குற்றமாகும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, மேற்குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில் இவ்விடத்தில் ஒரு இந்து கோவிலை நிர்மாணிப்பதற்கோ அல்லது புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கோ அனுமதி வழங்க முடியாது என்பது அறிவிக்கப்பட்டுள்ளதை தயவுடன் அறியத்தருகின்றேன்.
கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளருக்கு என்னால் அனுப்பி வைக்கப்பட்ட அக்கடிதத்தின் பிரதியொன்றை உங்களது மேலதிக புரிதலுக்காக இத்துடன் இணைத்துள்ளேன் என்பதையும் தயவுடன் அறியத்தருகின்றேன் என்றுள்ளது. குறித்த அறிவிப்பின் பிரதி சாக்கிய புத்திர தர்ம அமைப்பின் பிரதி செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை காலம்காலமாக தமிழ் மக்கள் வழிபாடு செய்து வந்த ஆதிசிவன் ஐயனார் ஆலயம் குருந்தூர்மலையில் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது, அப்பிரதேச மக்களுடையதாக மரபாக இருந்து வந்துள்ளது.
2018இல் திடீரென பௌத்த பிக்கு ஒருவர் இராணுவத்தினரின் துணையுடன், புத்தர் சிலையை வைக்க முயன்ற போது தொடங்கியது பிரச்சினை. அதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்று வழக்காக மாறியது. குறித்த இடத்தில் புராதன விகாரை ஒன்ற இருந்தது என்று கூறிக் கொண்டு, அந்த இடத்தில் புதிய விகாரை அமைக்க முயன்றிருந்தார் பௌத்த பிக்கு.
நீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரித்து வரும் அதேவேளை, தமிழ் மக்கள் தொடர்ந்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டதுடன், யாரும் அங்கு புதிய கட்டுமானங்களைச் செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.