காலமானார் பிரித்தானிய ராணி எலிசபெத்... அரசாங்கத்தின் அடுத்த திட்டம் என்ன?
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமான நிலையில், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த திட்டத்தை 1960களில் இருந்தே அந்நாட்டு அரசு திட்டமிட்டு வைத்துள்ளது.
பிரித்தானிய வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். இவர், கடந்த 1952 முதல் பிரிட்டன் மகாராணியாக இருந்து வந்தார்.
96 வயதாகும் இவரது உடல்நிலை மோசமான நிலையில், அவரது நெருங்கிய உறவினர்களும் மகாராணியைப் பார்க்க விரைந்தனர்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், கடந்த ஆண்டு ஏப்ரல் 9, 2021இல் உயிரிழந்தார்.
இரண்டாம் எலிசபெத்தின் உடல்நிலை கடந்த அக்டோபர் மாதம் முதலே மோசமாக இருந்ததால் அவரது மகன் இளவரசர் சார்லஸ் தான் மகாராணியின் வேலைகளில் பெரும்பாலானவற்றைக் கவனித்து வந்தார்.
இந்தச் சூழலில் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் காலமானது பிரித்தானிய மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்துள்ல நிலையில், இது உலகம் முழுவதும் எதிரொலிக்கும். இரண்டாம் எலிசபெத் உயிரிழக்கும் போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது அனைத்தும் ஏற்கனவே முன்கூட்டியே திட்டமிடப்பட்டு உள்ளன.
இதனை ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ் என்று குறிப்பிடுகின்றனர். 1960கள் முதலே இந்தத் திட்டம் தயார் நிலையில் உள்ளது. எலிசபெத் மகாராணி உயிரிழந்துள்ளதால், அங்கு வரும் நாட்களில் துக்கம் அனுசரிக்கப்படும்.
எலிசபெத் மகாராணி உயிரிழக்கும் போது, அது முதலில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் அது அவரது தனிப்பட்ட செயலாளருக்குத் தெரிவிக்கப்படும்.
அவர் பாதுகாப்பான தொலைப்பேசி இணைப்பில் பிரதமரைத் தொடர்பு கொண்டு, "லண்டன் பிரிட்ஜ் இஸ் டவுன்" என்ற வாக்கியத்தைத் தெரிவிப்பார்.
அதன் பின்னர் அமைச்சரவை செயலாளர் மூலம் மற்ற அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்படும்.
பிரித்தானிய அரசு ஊடகம் மற்றும் ரேடியோ மூலம் அவரது மரணம் குறித்து செய்தி பொதுமக்களிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
அனைத்து பிபிசி ஊடகங்களிலும் பிற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, எலிசபெத் மகாராணி இறுதிச்சடங்கு குறித்த நேரலை செய்யப்படும். பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயில்களிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்படும்.
இளவரசர் சார்ல்ஸ் மற்றும் பிரிட்டன் பிரதமர் பொதுமக்களிடம் உரையாற்றுவார்கள். அரசு கட்டிடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அங்கு அவரது அரசு இறுதிச் சடங்கு செய்யப்படும்.
மகாராணி இப்போது ஸ்காட்லாந்தில் உள்ள நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார் ஆப்ரேஷன் யூனிகார்ன் என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
இரண்டாம் நாள் காலை, பிரித்தானிய கவுன்சிலின் உறுப்பினர்கள் சார்லஸை புதிய அரசராக அறிவிப்பார்கள். செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை மற்றும் ராயல் எக்ஸ்சேஞ்சில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்.
நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்துவார்கள். ராணியின் உடல் அரசு ரயில் அல்லது ராயல் ஏர்ஃபோர்ஸ் மூலம் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்து வரப்படும்.
மூன்று மற்றும் நான்காம் நாளில் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ள சார்லஸ் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, பெல்பெஸ்ட் பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.
மறுபுறம் லண்டனில் மகாராணி எலிசபெத் இறுதிச் சடங்கிற்கான ஒத்திகைகள் மேற்கொள்ளப்படும். ஐந்தாம் நாளில், பக்கிங்ஹாம் அரண்மனையில் தொடங்கி, நாடாளுமன்ற மாளிகை வரை ஊர்வலம் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து எம்பிகள் அஞ்சலி செலுத்த ஏதுவாக ராணியின் உடல் வைக்கப்படும். அதைத் தொடர்ந்து 6 முதல் 9ஆம் நாட்கள் வரை மன்னர் சார்லஸ் அடுத்து வெல்ஷ் நாடாளுமன்றத்திற்குச் சென்று கார்டிஃப் லியாண்டாஃப் கதீட்ரல் செல்வார். மறுபுறம் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை அடையும். பக்கிங்ஹாம் அரண்மனையில் பொதுமக்கள் கூடுவார்கள்.
அதைத்தொடர்ந்து 10ஆம் நாளில் இறுதிச்சடங்கு நடைபெறும். எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் இரு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படும்.
இது தவிர எலிசபெத் மகாராணி உயிரிழந்தால் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். மேலும், நாடாளுமன்றம் அப்போது நடந்து கொண்டு இருந்தால் அதுவும் ரத்து செய்யப்படும்.