20 ஓவர் உலக கிண்ணப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து
20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் முதலாவது அரைஇறுதி போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். தொடக்கவீரர் பேர்ஸ்டோ 13 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆடம் மில்னே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால், பவர்-பிளே முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 40 ஓட்டங்கள் எடுத்தது. எனினும்,தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பட்லர் 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மொயின் அலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 2 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஆடம் மில்னே, டிம் சவுதி, சோதி மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து 167 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் சார்பில் மார்டின் கப்டில் மற்றும் மிட்சல் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். ஆரம்பத்திலே அதிர்ச்சி அளிக்கும் விதமாக கப்தில் 4 (3)ஓட்டங்களிலும் , அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 5 (11) ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனிடையே அதிரடியாக ரன் சேர்த்துக்கொண்டிருந்த ஜேம்ஸ் நீஷம் 27 (11) ஓட்டங்களில் கேட்ச் ஆனார். முடிவில் அதிரடி காட்டிய மிட்செல் 72 (47) ஓட்டங்களும் , சாண்டனர் 1 (1) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 19 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 167 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் வோக்ஸ், மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ரஷித் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
இதன் மூலம் 20 ஓவர் உலக கிண்ணப் போட்டியில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.