இலங்கை - பாகிஸ்தான் கடற்படைப் பயிற்சி தொடர்பில் வெளியான செய்தி
இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து இலங்கை - பாகிஸ்தான் கடற்படைப் பயிற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் வேண்டுகோளின் பேரில் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய, குறித்த பாகிஸ்தான் கப்பல் கொழும்புக்கு வந்ததாகவும், இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்ட பிறகு மார்ச் 6 ஆம் திகதி அந்தக் கப்பல் நாட்டை விட்டுப் புறப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியது.
இந்தியாவின் அழுத்தம் காரணமாக, திருகோணமலைப் பகுதியில் பாகிஸ்தான் இலங்கை கடற்படைப் பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று (19) செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியப் பிரதமரின் இலங்கை வருகைக்கு சில வாரங்களுக்கு முன்னர், சம்பந்தப்பட்ட இராணுவப் பயிற்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.
இது தொடர்பாக அத தெரண, பாதுகாப்பு அமைச்சிடம் வினவிய போது, அது உண்மைக்கு புறம்பான செய்தி என அந்த அமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.