புத்தாண்டு கொடுப்பனவை பெறாதவர்களுக்கு நாளைய தினம் வழங்க நடவடிக்கை
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெறாதவர்களுக்கு நாளைய தினம் அதனை வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலினால் பாதிப்பிற்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏழு பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகள் இதனைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த கொடுப்பனவு ஒரு பயனாளி குடும்பத்திற்கு ஒரு பிரிவின் கீழ் மட்டுமே வழங்கப்படும் என கொடுப்பனவு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர் பட்டியலில் ஒரு வீட்டு குடும்பத்திற்கு உட்பட்டதாக வீட்டு குடும்ப தலைவரின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பிரதான குடும்ப அலகிற்கும் பிரதான குடும்ப அலகிற்கு மேலதிகமாக இணைந்த குடும்பம் என்ற ரீதியில் வாழும் குடும்பத்திற்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.