புத்தாண்டு தினத்தில் யாழில் நடந்த கொடூரம் ; இளைஞர் மீது போதைக் கும்பல் தாக்குதல்
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை, நாரந்தனை வடக்கு பகுதியில் மதுபோதையில் இருந்த கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர், படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தாண்டு தினமான நேற்று (01) மாலை 6.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குப் பொருட்களைக் கொள்வனவு செய்யச் சென்றபோது, அவரை வழிமறித்த கும்பல் ஒன்று கை மற்றும் பொல்லுகளால் தலை மற்றும் உடலின் பல பாகங்களில் கடுமையாகத் தாக்கியுள்ளது.

இதன்போது இளைஞர் கூச்சலிட்டதையடுத்து, சத்தம் கேட்டு அயலவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதனைக் கண்ட தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்ட இளைஞர், ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சையின் அவசியம் கருதி அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் சட்டவிரோதமாக மாடுகளைப் பிடித்து விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் இந்தக் கும்பல் மாடுகளைத் திருடியபோது, பாதிக்கப்பட்ட இளைஞர் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து எச்சரித்துள்ளார்.
இதன் பின்னணியிலேயே பழிவாங்கும் நோக்கோடு இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பொலிஸார், பாதிக்கப்பட்ட இளைஞரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.