இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு விடுத்த எச்சரிக்கை
இலங்கை மத்திய வங்கி மற்றும் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் போல் நடித்து, வங்கி வைப்பாளர்களிடமிருந்து பணத்தை மோசடியாகப் பெறும் புதிய நிதி மோசடி தொடர்பில் இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசடிக்காரர்கள் தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பொதுமக்களை தொடர்புகொண்டு, வங்கி வைப்புக் கணக்குகள் தொடர்பான தகவல்களை அறிந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

விசாரணைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என அச்சுறுத்தல்
பின்னர், அந்தப் பணம் சட்டவிரோதமாகப் பெறப்பட்டுள்ளதாக பொய்யான தகவலைத் தெரிவித்து, பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என அச்சுறுத்துகின்றனர்.
தொடர்ந்து, மத்திய வங்கியின் பெயர் மற்றும் இலச்சினையைப் பயன்படுத்தி, அதிகாரிகளின் கையொப்பங்கள் மற்றும் முத்திரைகளுடன் போலியான கடிதங்களை அனுப்பி, குறிப்பிட்ட தனியார் வங்கிக் கணக்கொன்றுக்கு பணத்தை மாற்றுமாறு அறிவுறுத்துகின்றனர்.
குறித்த கணக்கு பொலிஸ் அதிகாரியொருவருக்குச் சொந்தமானது எனக் கூறி, ஆரம்பத்தில் வைப்புத் தொகையின் ஒரு பகுதியை மாற்றுமாறும், பின்னர் பணம் செலுத்தியதற்கான வங்கி பற்றுச்சீட்டை அனுப்புமாறும் மோசடிக்காரர்கள் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொலிஸ் சீருடைகள், போலி அடையாள அட்டைகள் மற்றும் முத்திரைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி இந்த மோசடியை உண்மையான அதிகாரிகளின் நடவடிக்கை போன்று காண்பிக்க முயற்சிப்பதாகவும் இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு தெரிவித்துள்ளது.
குறிப்பாக முதியவர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் இத்தகைய மோசடிகளுக்கு இலக்காகும் வாய்ப்பு அதிகம் என்பதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நிதித் தகவல்கள் அல்லது பணப் பரிமாற்றங்களைக் கோரும் சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் மற்றும் கடிதங்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும், குடும்பத்தில் உள்ள வயதானவர்களுக்கும் இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.