வடக்கு, கிழக்கிலுள்ள காணிப் பிரச்சனை தொடர்பில் ஜனாதிபதி அநுர கவனம்
வடக்கு கிழக்கு காணிகள் தொடர்பாகவும் மாகாண சபை நிதிப் பயன்பாடு தொடர்பிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாகாண ஆளுநர்களுடான ஜனாதிபதியின் சந்திப்பின் போது இந்த விடயம் ஆராயப்பட்டது. சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
கல்வித் துறை
மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதோடு அதற்குச் சாதகமான தீர்வுகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
தற்போதைய நிலைமாறு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை இலகுபடுத்துவதற்கு மாகாண சபைகளினால் வழங்கக் கூடிய உச்ச சேவையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மக்களின் வாழ்க்கையை இலகுவாக்கும் வகையில் மாகாண சபைகளினால் சாத்தியமான அனைத்து பொருளாதார மற்றும் சமூக தலையீடுகளையும் மேற்கொள்ளுமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
தரமான அரச சேவை
புதிய அரசியல் கலாசாரமொன்றை ஆரம்பிப்பதற்காகக் கிடைத்துள்ள மக்கள் ஆணையை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, மக்களின் எதிர்பார்ப்பை பாதிக்காத வகையில் செயற்படுமாறும் வலியுறுத்தினார்.
அரசாங்க சொத்துக்களை பயன்படுத்துவதில் முன்னைய மோசமான முன்னுதாரணங்களை ஒதுக்கி தரமான அரச சேவைக்கு தம்மை அர்ப்பணிக்குமாறு ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.