சிஎஸ்கே ரசிகர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தோல்விகளால் பின்னடைவைச் சந்தித்துள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு, டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் பெரும் பலம் கிடைக்கவுள்ளது.
அணியின் நட்சத்திர வீரர்களான எம்.எஸ். தோனி மற்றும் டெவால்ட் பிரேவிஸ் ஆகியோர் முழு உடல் தகுதியை எட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கணுக்கால் தசைப்பிடிப்பு (Calf Strain) காரணமாக இந்த சீசனின் முதல் மூன்று போட்டிகளைத் தவறவிட்ட தோனி, தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அடுத்த இரண்டு நாட்களில் அவருக்கு நடத்தப்படும் உடல் தகுதித் தேர்வில் (Fitness Test) தேர்ச்சி பெற்றால், சனிக்கிழமை நடைபெறவுள்ள டெல்லிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலா தசைப்பிடிப்பு (Side Strain) காரணமாக அவதிப்பட்டு வந்த இளம் அதிரடி வீரர் டெவால்ட் பிரெவிஸும் தற்போது குணமடைந்து வருகிறார்.
அவர் அடுத்த போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஸ்டீபன் பிளெமிங் உறுதிப்படுத்தியுள்ளார்
நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில், விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தில் உள்ள சென்னை அணிக்கு, இவர்களின் வருகை மிகப்பெரிய ஊக்கமாக அமையும்.