பழ விவசாயிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்
பழப் பயிர்ச்செய்கையில் ஏற்படும் பல்வேறு அபாயங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டமொன்றை விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் கீழ், விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட அன்னாசி, பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்ட பழப் பயிர்களுக்கு காப்புறுதி பெற்றுக்கொள்ள முடியும்.
விவசாயிகள் அடிப்படை காப்புறுதித் தொகையில் 7 சதவீதத்திற்கு சமமான காப்புறுதிக் கட்டணத்தை செலுத்தி இந்தப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தங்கள், நோய்கள், பூச்சி மற்றும் புழுத் தாக்குதல்கள் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இந்தக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.
அத்துடன், காட்டு யானைகளினால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கும் காப்புறுதி பாதுகாப்பு வழங்கப்படுவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
பயிர்களுக்கு சேதம் ஏற்படும் பட்சத்தில், ஒரு ஏக்கருக்கு 3 இலட்சம் ரூபாய் முதல் 4 இலட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படலாம் என சபை தெரிவித்துள்ளது.
விவசாய அபாயங்களை சிறப்பாக முகாமைத்துவம் செய்வதற்கும், பழப் பயிர்ச்செய்கையில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்கும் இந்தத் திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.