வைத்தியசாலையின் நீர்த்தாங்கியில் இருந்து மீட்கப்பட்டவர் தொடர்பில் புதிய தகவல்!
கம்பளை வைத்தியசாலையில் 40 அடி ஆழமான நீர்த் தாங்கியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் கொரோனா நோயாளர் ஒருவருடையது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக சடலமாக மீட்கப்பட்டவர் இருதய நோயாளி எனவும் வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
மேற்படி உயிரிழந்தவர் கொரோனா நோயாளி என தெரிவிக்கப்பட்ட ஊடக அறிக்கைகளுக்கு பதிலளித்த கம்பளை மருத்துவமனையின் பேச்சாளரான மருத்துவ அதிகாரி, பாதிக்கப்பட்டவர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் எனவும், கொரோனா தொற்றால் அல்ல என தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் ஒரு மாதத்திற்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார், ஆனால் அவர் வைரஸிலிருந்து முழுமையாக குணமடைந்தார். மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து கம்பளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது அவருக்கு முன்னெடுக்கப்பட்ட விரைவு என்டிஜென் பரிசோதனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், உயிரிழந்தவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட குறிப்பிட்ட நீர்த் தாங்கியில் இருந்து வழங்கப்பட்ட நீரையே மருத்துவமனையில் இருந்த மக்கள் அருந்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை உயிரிழந்தவர் ஒரு மாதத்திற்கு முன்பே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், கொவிட்-19 தண்ணீரின் மூலம் பரவுமா என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளரிடம் கேட்ட போது, வைரஸ் தண்ணீரின் மூலம் பரவவில்லை என்றும் அவர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.