சிறுமி துஷ்பிரயோக வழக்கில் தேரருக்கு எதிராக புதிய தகவல்கள் ; நீதிமன்றத்தில் அதிர்ச்சி குற்றச்சாட்டு
அநுராதபுரத்தின் எட்டு முக்கிய விகாரைகளின் பிரதம தேரரான பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள சிறுமி துஷ்பிரயோக வழக்கில், அவருக்கு எதிராக போதுமான அளவிலான அறிவியல் மற்றும் நேரடி ஆதாரங்கள் இருந்தபோதிலும், பொலிஸார் அநீதியான முறையில் செயற்பட்டுள்ளதாக சிறுவர் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி சஞ்சீவினி அபேகோன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நேற்று அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, சம்பவத்தின் போது இரத்தம் தோய்ந்திருந்ததாகக் கூறப்படும் சிறுமியின் உள்ளாடையும், தேரரின் விந்து துடைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துணித்துண்டுகளும் முக்கிய ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இவை தற்போது இரசாயன பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும், தேரரும் பாதிக்கப்பட்ட சிறுமியும் இடையே இடம்பெற்றதாகக் கூறப்படும் 88 தொலைபேசி அழைப்புகளுக்கான சான்றிதழ்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வளவு ஆதாரங்கள் இருந்தபோதிலும், பொலிஸார் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தேரரின் விகாரைக்கே சென்று அவருக்கு சாதகமான வகையில் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக சஞ்சீவினி அபேகோன் குற்றம்சாட்டினார்.
இந்த வழக்கை பொலிஸார் அலட்சியமாக கையாண்டதுடன், தேரருக்கு பிணை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பதினைந்து வயதிற்குக் குறைவான சிறுமி ஒருவரை அவரது தாயின் ஒத்துழைப்புடன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பல்லேகம ஹேமரத்ன தேரர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி ஆரம்பத்திலேயே பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தபோதிலும், அதிகாரிகள் தாமதமாக நடவடிக்கை எடுத்ததாக சமூக அமைப்புகள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து கடந்த 9ஆம் திகதி கைது செய்யப்பட்ட தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 50 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளும், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையும் விதித்து தேரரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
மேலும், அவர் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டதுடன், சம்பவத்திற்கு துணைநின்றதாகக் கூறப்படும் சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.