நாளை முதல் புதிய சுகாதார வழிமுறைகள்: வெளியான முக்கிய தகவல்
இலங்கையில் நாளை (01) முதல் 15ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் புதிய சுகாதார வழிமுறைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நாளை (01) புதன்கிழமை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை குறித்த வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த புதிய சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, புதிய வழிகாட்டல்களில் குறிப்பிட்டிருப்பது, திருமண மண்டபத்தின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மாத்திரமே திருமண நிகழ்வுகளில் பங்கேற்க முடியும். அத்துடன் அவர்களுள் 200 பேர் அளவிலானவர்களே கலந்து கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், திறந்தவெளி திருமண நிகழ்வுகளில் 250 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்று அல்லாத மரண சடங்குகள் 24 மணி நேரத்தில் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதுடன் அந்த சடங்குகளில் 20 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளை ஒமிக்ரோன் வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.