கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் புதிய அடிக்கல் நாட்டு நிகழ்வு; அவிழ்த்து விடப்பட்ட கதை!
திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் 136ஆவது தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு, தொல்பொருள் அமைவிடத்தைச் சிதைவடையாது பாதுகாக்கும் நோக்கில் புதிய கட்டுமானத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (22) இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.எம்.ஹேமந்தகுமார முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

கட்டுமானப் பணிகள்
வரலாற்றுத் தகவல்களின்படி, சோழர் ஆட்சிக்காலத்தில் தமிழ் மொழியின் மூலம் தமிழர்களான பௌத்தர்களுக்குப் பௌத்த கல்வி கற்பிக்கும் சைத்தியம் ஒன்று அங்கு காணப்பட்டதாகவும், பின்னர் அதே இடத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிள்ளையார் கோயில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதற்கிடையில், இக்காணி மடத்தடி முத்துமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமானது என்றும், 2002ஆம் ஆண்டு சிதிலமடைந்த கோயிலைப் புனர்நிர்மாணம் செய்ய முயன்ற போது அது தொல்பொருள் திணைக்களத்தால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் காணி உரிமையாளரான திருமதி கோகிலவதனி கணேஷ் தெரிவித்தார்.

பராமரிப்பின்றி இக்கோயில் அழிவடைந்த நிலையில், புதிய ஆலய அமைப்புப் பணிகள் காணி உரிமையாளரால் தொடங்கப்பட்டபோதிலும், அங்கு புராதன தொல்பொருள் படிவங்கள் உள்ளன என்ற காரணத்தினால் கட்டுமானப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக உரிமையாளர் தரப்பு தெரிவித்துள்ளது.
நிகழ்வில் பேசிய திருகோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் டபிள்யு.யு.சுரங்க பெரேரா, அழிவடைந்த சிதிலங்களை ஒன்றிணைத்துப் புராதன கட்டுமானத்தைப் பாதுகாப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கம் என்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,

"கன்னியாவில் இன்று நடைபெறும் நிகழ்வு எந்த மதமும் சார்ந்தது அல்ல; இலங்கையின் புராதன தொல்பொருள் இடமொன்றைப் பாதுகாக்கும் முயற்சியே இதுவாகும். இதற்குச் சிலர் இன, மத சாயங்களைப் பூச நினைக்கின்றனர்.
தற்போதைய 100 தொல்லியல் பகுதிகளைப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ், இன்னும் சில தினங்களில் சேருநுவிலை பிரதேச செயலகப் பிரிவின் சோமாவதி பாதுகாப்பு அரண் பகுதியில் அமைந்துள்ள சோழர்கால ஸ்ரீ மங்களபுரம் சிவன் ஆலயத்தைப் பாதுகாக்கும் வகையிலான கட்டுமானமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எனவே, தொல்லியல் திணைக்களம் மத, இனவாத நோக்குடன் செயற்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
நேற்றைய நிகழ்வில் மாவட்ட தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர், பிரதேச கிராம சேவகர், இஸ்லாமிய மதகுரு மற்றும் துறைசார் அலுவலர்கள் கலந்துகொண்டு அடிக்கற்களை நாட்டி வைத்தனர். இந்நிகழ்விற்கு வில்கம் விஹாரையின் நாயக்க தேரர் அம்பிட்டியே சீலவண்ஸ திஸ்ஸ தேரர் அனுசாசனம் வழங்கினார்.