ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திரங்கள் (ATM) மற்றும் பண வைப்புச் இயந்திரங்கள் (CDM) அருகில் இடம்பெறும் புதிய வகையான நிதி மோசடிகள் தொடர்பில் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்களின் உதவும் மனப்பான்மையைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவல்துறையின் தகவலின்படி, CDM இயந்திரங்களுக்கு அருகில் நடமாடும் மோசடிக்காரர்கள், தங்களால் பணத்தை வைப்புச் செய்ய முடியவில்லை எனக் கூறி, பொதுமக்களிடம் பணத்தை மாற்றித் தருமாறு கோருகின்றனர்.

இதன்போது, ஆரம்பத்தில் 500 ரூபாய் நாணயத்தாளைக் கொடுத்து இந்த மோசடியை முன்னெடுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், பொதுமக்கள் தாம் வழங்கிய பணம் குறித்து நினைவூட்டும்போது, பணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை எனக் கூறி அவர்களை ஏமாற்றி, பணத்தை அபகரிப்பதாகக் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, ATM மற்றும் CDM இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், இவ்வாறான சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடியாகக் காவல்துறைக்குத் தெரியப்படுத்துமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.