கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறிமுகமான புதிய வசதிகள் ; வெளியான மகிழ்ச்சி தகவல்
பயணிகளின் விமானப் பயணத்துக்கான பதிவுகளை எளிதாக்கவும், பரபரப்பான நேரங்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் மேலும் 20 புதிய சுய பதிவு (Self-Check-in Kiosks) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தரை கையாளுகை நிறுவனம் ஆகியன இணைந்து கூட்டாக அறிமுகப்படுத்தியுள்ளன.
புதிய Self-Check-in Kiosks இயந்திரங்கள்
புதிய இயந்திரங்கள் திறம்பட செயல்படவும், பயணிகளுக்கு மென்மையான அனுபவத்தை வழங்கவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தரை கையாளுகை நிறுவனத்தின் விமான நிலைய பிரதானி தெரிவித்தார்.
ஆரம்பத்தில் 8 சுய-பதிவு இயந்திரங்கள் நிறுவப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 20 இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் மொத்த சுய-பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
விமானப் பதிவுக்கான கால அவகாசம் மூன்று மணிநேரத்தில் இருந்து நான்கு மணிநேரமாக நீடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் ஓய்வுடனும் இலகுவாகவும் தங்கள் பயணப் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
பயணிகள் தாங்களாகவே பதிவுகளைச் செய்து கொள்ளும் வகையில் சுயமாக பயணப் பொதிகளை இடும் வசதியும் (Self-Bag Drop) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விமானங்களுக்கான பதிவுகளும் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் முடிவடையும் என்பதை பயணிகள் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த புதிய வசதிகள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாகப் பயணம் செய்யும் அனைத்துப் பயணிகளின் அனுபவமும் மேலும் சிறப்பாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.