தவெக கட்சி உறுப்பினர்கள் மீது திமுக வினர் தாக்குதல்; கர்ப்பிணிப் பெண் பெண் அவசர சிகிச்சைப்பிரிவில்
சென்னை துறைமுகம் தொகுதியில் உள்ள பாரிமுனை அங்கப்பபன் நாயக்கன் தெருவில் தவெக கட்சி சேர்ந்த 5 பெண்கள் உள்பட 10 பேர் தாகப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றையதினம் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தவெக துண்டு அணிந்து தேர்தல் சர்வே எடுக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த திமுகவட்ட செயலாளர் கவியரசு உள்ளிட்டோர் தவெகவினரை தடுத்ததாகவும் அப்போது, ஏற்பட்ட தகரறில் தவெகவினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்
திமுகவினர் நடத்திய தாக்குதலில், கர்ப்பிணிப் பெண் உட்பட 2 பேர் ஸ்டான்லி மருத்துவமனை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில்,
”சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன். தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம் என பதிவிட்டுள்ளார்.