எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம் ; இலங்கை–சீனா கூட்டாண்மையில் புதிய அத்தியாயம்
அம்பாந்தோட்டை சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்திற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் நிறைவு செய்யப்படும் என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ உடன் இன்று (12) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், மூலோபாய ஒத்துழைப்பு கூட்டாண்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் கூட்டாண்மையை அதிகரிப்பது குறித்து இரு அமைச்சர்களும் விரிவாகக் கலந்துரையாடினர்.
மேலும், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 2027 ஆம் ஆண்டுடன் 70 ஆண்டுகள் நிறைவடைவதனை முன்னிட்டு, அதன் 70 ஆவது ஆண்டு விழாவை இரு நாடுகளும் இணைந்து கொண்டாடுவதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது. பல தசாப்த கால நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை இரு அமைச்சர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை மிக வேகமாகப் பொருளாதார மீட்சியை அடையும் எனத் தாம் நம்புவதாக சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இச்சந்திப்பின் போது பாராட்டுத் தெரிவித்தார்.