அநுரகுமார ஆட்சியிலும் நிற்காத காணி அபகரிப்பு ; தமிழ் மக்கள் உரிமைக்கு அடுத்த போராட்டம்
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திலும் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன என ஜனநாயக தமிழரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
எதிர்வரும் 20.01.2026 அன்று காலை 9.00 மணிக்கு, யாழ்ப்பாணம் தீவகம் வடக்கு ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவின் எழுவைதீவு J/39 கிராம அலுவலகப் பிரிவில், “காளவாடியடைப்பு” என அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான 2 பரப்பு காணி, இலங்கை கடற்படைக்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, 21.01.2026 அன்று காலை 9.00 மணிக்கு, எழுவைதீவு மூன்றாம் வட்டாரத்தில் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 53 பேர்ச்சஸ் பரப்பளவு கொண்ட காணி, இலங்கை கடற்படையின் எலரா படையணி முகாம் அமைப்பதற்காக நில அளவைக் காரியாலயத்தின் மூலம் சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை தமிழ்த் தேசிய பேரவையின் சார்பிலான ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினரும், ஜனநாயக தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி உப செயலாளருமான திருமதி நிரஞ்சினி ஜெலஸ்ரனிஸ்லாஸ் தெரிவித்துள்ளார்.
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பும் இதே காணியை கடற்படைக்காக அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, எழுவைதீவு மக்களுடன் இணைந்து அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தியதாகவும், இந்நிலையில் மீண்டும் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை பலாத்காரமானதும் ஜனநாயக விரோதமானதும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த காணி அபகரிப்பு முயற்சியைத் தடுத்து நிறுத்த எழுவைதீவு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
சிங்கள பேரினவாதத்தின் கொள்கையும் சிந்தனையும் இன்னும் மாற்றமடையவில்லை என்பதற்கான மற்றொரு சாட்சியாக இந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கை அமைந்துள்ளதாகவும், இது தமிழ் மக்களின் நில உரிமைகளுக்கு எதிரான தொடர்ச்சியான அத்துமீறலாகவும் காணப்படுவதாக ஜனநாயக தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார்.