போதைப்பொருள் வர்த்தகம் அம்பலம் ; இரண்டு பெண்கள் கைது
களுத்துறை அளுத்கம பிரதேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஹெரோயினை பதுளை மற்றும் பண்டாரவளை பிரதேசங்களுக்கு விற்பனை செய்யும் கடத்தல் வலையமைப்பைக் கண்டறிந்து, அது தொடர்பான ஒரு சந்தேகநபரையும், இரண்டு பெண் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொதி செய்யப்பட்ட ஆயிரம் ஹெரோயின் பக்கெட்டுகளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாலி-எல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் 28 மற்றும் 30 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் பதுளை மற்றும் பண்டாரவளை பிரதேசங்களுக்கு போதைப்பொருட்களை விநியோகிப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் அந்த வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அப்போது போதைப்பொருளைப் பொதி செய்து கொண்டிருந்த இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்து மேற்கொண்ட விசாரணைகளில், அளுத்கமவில் இருந்து வரும் ஒருவரே அவர்களுக்கு ஹெரோயினை வழங்குவது தெரியவந்தது.
அவரைப் பிடிப்பதற்காக பண்டாரவளைப் பொலிஸார் ஒரு தந்திரோபாயத்தைப் பயன்படுத்தினர்.
அதன்படி, கடந்த பௌர்ணமி தினத்தன்று, சந்தேகநபரின் தொலைபேசி மூலம் பண்டாரவளை தோவ ரஜமகா விகாரைக்கு வருமாறு பெண் சந்தேகநபர்கள் மூலம் தகவல் அனுப்பப்பட்டது.
அதற்கமைய, அவர் வெள்ளை உடையில் போதைப்பொருட்களுடன் விகாரைக்கு வந்துள்ளார். அவர் பெண் சந்தேகநபர் ஒருவருக்குப் போதைப்பொருளை வழங்க முற்பட்டபோது, சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.