அமைச்சர் பதவி தொடர்பில் நாமல் வெளியிட்ட முக்கிய தகவல்!
அமைச்சர் பதவி கிடைத்தால் நான் அதை மனதார ஏற்றுக்கொள்வேன். ராஜபக்ஷ குடும்பத்தில் எவரும் இனிமேல் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்க முடியாது என்று எந்தச் சட்டத்திலும் இல்லை. என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் அமைச்சுப் பதவிகளிலிருந்து ஏப்ரல் மாதம் விலகினர்.
மே மாதம் 9ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவும், (Mahinda Rajapaksa) ஜூன் மாதம் 9ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷவும் (Gotabaya Rajapaksa) முறையே பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளிலிருந்து விலகினர்.
பதவி விலகி நாட்டைவிட்டுத் தப்பியோடிய கோட்டாபய மீண்டும் நாடு திரும்பியுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டபோது ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த சசீந்திர ராஜபக்ஷவுக்கு பதவி வழங்கப்பட்டது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் மேலும் சிலருக்கு வழங்கப்படவுள்ளன எனவும், அதில் நாமல் ராஜபக்ஷவும் உள்ளடக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“எனக்கு எந்த அமைச்சுப் பதவி பொருத்தம் என்பதை ஜனாதிபதிதான் தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பில் நான் தீர்மானிக்க முடியாது.
நான் மக்களால் தேர்ந்தெடுக்க பிரதிநிதி. எனவே, மீளவும் அமைச்சுப் பதவி கிடைத்தால் அதனூடாக மூவின மக்களுக்கும் மென்மேலும் சேவையாற்றுவேன்” என்றார்.