ஜனாதிபதி தலைமையில் இன்று புதிய அமைச்சரவை நியமனம்!
சர்வதேச நாணய நிதியத்திற்கும், நிதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ள நிலையில் மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையை இன்று நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக நம்ப தகுந்த தரப்பினர் ஊடாக அறிய முடிகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி நியமிக்கப்பட்டதையடுத்து இடைப்பட்ட இரு வருட காலத்தில் இரண்டு முறை மறுசீரமைக்கப்பட்டதுடன் கடந்த 3ஆம் திகதி முழுமையாக கலைக்கப்பட்டு தற்போது மீண்டும் புதியதாக அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் 15 முதல் 22 வரையில் வரையறுக்கப்பட்ட வகையில் மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையை இன்று நியமிக்க அதிக சாத்தியம் காணப்படுவதுடன் புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று மாலை இடம்பெறுவதற்கான சாத்தியமும் அதிகளவில் காணப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையி;ல் முன்னாள் அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ,சமல் ராஜபக்ஷ உட்பட இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோர் அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்ளவில்லை.
அத்துடன் பெரும்பாலான சிரேஷ்ட அரசியல்வாதிகளும் அமைச்சு பதவிகளை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவிர்த்து ஏனைய 26 அமைச்சர்கள் கடந்த 3 ஆம் திகதி இரவு கூட்டாக அமைச்சு பதவிகளில் இருந்து விலகினர்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைச்சு பதவிகளை ஏற்று இடைக்கால அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பினை பாராளுமன்றில் அங்கம் பிரதான அரசியல் கட்சிகள் புறக்கணித்ததை தொடர்ந்து இடைக்கால அரசாங்கம் அமைத்தல் இழுபறி நிலையில் காணப்பட்டது.
அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 41 பேர் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதியுடன் முன்னெடுத்து வந்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து அரசாங்கத்துடன் இனி எவ்வித பேச்சுவார்த்தைகளும் கிடையாது என காரசாரமாக தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவை பதவி நீக்கும் வரை இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கப்போவதில்லை என 11 பங்காளி கட்சிகள் சார்பில் சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்ற பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், கூட்டாக அமைச்சு பதவிகளில் இருந்து விலகியவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம்,நாட்டின் நிதி நிலைமை மற்றும் அரசியல் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தினதும்,சர்வதேச நிதி நிறுவனங்களினதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு நிலையான அரசாங்கம் காணப்பட வேண்டும் என்பதை பதவி விலகிய அமைச்சர்கள் ஜனாதிபதியி;டம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
புதிய அமைச்சரவையில் அமைச்சு பொறுப்பினை ஏற்க போவதில்லை.மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய இளம் தலைமுறையினரை உள்ளடக்கிய அமைச்சரவையினை நியமித்து நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு துரிதகர தீர்வு பெற்றுக்கொள்வது அவசியமாகும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
புதிய மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ,நாமல் ராஜபக்ஷ,சமல் ராஜபக்ஷ,இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோர் அமைச்சு பதவிகளை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
அத்துடன் முன்னாள் அமைச்சர்களான காமினி லொகுகே,மஹிந்தானந்த அளுத்கமகே,ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரும் அமைச்சு பதவிகளை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.