உயிரிழந்த மீனவர்களின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்
நுரைச்சோலை நாரக்கல்லி பிரதேசத்தில் கடலோரத்தில் ஒதுங்கிக் கிடந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தைப் பருகியதால் ஏற்பட்ட சிக்கல்களால் உயிரிழந்த இரு மீனவர்களின் மரணம் தொடர்பாக திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புத்தளம் ஆதார வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன அப்புஹாமி, பிரேதப் பரிசோதனையின் போது தெரிவிக்கையில்,
உயிரிழந்த மீனவர்களின் உடல் பாகங்களை அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் அனுப்பி, மேலதிக அறிக்கையைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், உயிரிழந்த இரு மீனவர்களும் பருகிய பிளாஸ்டிக் போத்தலில் என்ன இருந்தது என்பதைக் கண்டறிய, அந்தப் போத்தலில் மீதமிருந்த திரவத்தையும் அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் நேற்று (29) இருவர் உயிரிழந்ததுடன், உடல்நலக் குறைபாடுகள் காரணமாக மேலும் சிலர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த, 34 மற்றும் 40 வயதுடைய இரு மீனவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.