மின்சார நெருக்கடிக்கு காரணம் நிலக்கரி மோசடி? அரசாங்கம் மீது புதிய குற்றச்சாட்டு
தரம் குறைந்த நிலக்கரியை நாட்டுக்கு இறக்குமதி செய்தமை தொடர்பான அறிக்கையை பகிரங்கப்படுத்தாமல் இருக்க வலுசக்தி அமைச்சர் கடும் முயற்சி எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சாணக்க தெரிவித்துள்ளார்.
குறித்த அமைச்சர் ஐந்து நாட்களுக்கும் மேலாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தங்கியிருந்து சதித்திட்டங்களை தீட்டி வருவதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
"நிலக்கரி மோசடியானது இந்த அரசாங்கத்தின் ஒரு மோசடியாகும். இந்த நிலக்கரி மோசடியினால் நாட்டின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகின்றது. புத்தாண்டு காலம் நெருங்குகிறது, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஜெனரேட்டர்களைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் அந்த ஜெனரேட்டர்களுக்கான எரிபொருளையும் அரசாங்கமே கொண்டு வர வேண்டியுள்ளது. நிலக்கரி மோசடியை மூடிமறைக்க இன்று மின்சாரக் கட்டணச் சுமையை மக்கள் மீது சுமத்தியுள்ளனர்.
நுரைச்சோலை தொடர்பான முதல் அறிக்கை ஜனவரி 02ஆம் திகதி வெளியானது, ஆனால் மூன்று மாதங்கள் கடந்தும் வலுசக்தி அமைச்சர் அங்கு செல்லவில்லை.
எனினும், நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட பின்னர், அமைச்சர் இப்போது நுரைச்சோலையில் தங்கியிருந்து அந்த மோசடியை மறைக்க முயற்சி செய்கின்றார்.
அறிக்கைகளை வெளியிடாமல், தனது நெருங்கிய நண்பர் ஒருவரைப் பயன்படுத்தி இந்த மோசடியை மூடிமறைக்க அமைச்சர் பெரும் முயற்சி எடுத்து வருகின்றார்.
இப்போது அரசாங்கம் ஊழல் நடந்துள்ளது என்பது போலக் கூற முனைந்தாலும், அந்தத் தவறு தங்களுடையது அல்ல என்று கூறவே முயற்சிக்கின்றது.
நாட்டில் பல்வேறு மோசடிகள் நடக்கின்றன, இவை அனைத்திற்கும் எதிராக இப்போது கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன, பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன." என்றார்.