பிறந்த குழந்தைகளின் உடல்நிலையை மதிப்பிட புதிய AI செயலி அறிமுகம்
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநில அரசு, புதிதாகப் பிறந்த குழந்தைகளின் முக்கிய சுகாதார அளவீடுகளை எளிதாகவும் துல்லியமாகவும் மதிப்பீடு செய்வதற்காக புதிய செயற்கை நுண்ணறிவு (AI) செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
'சிஷு மாபன்' (Shishu Maapan) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி, குழந்தைகளை நேரடியாகத் தொடாமலேயே அவர்களின் உடல்நிலை தொடர்பான முக்கிய தகவல்களைப் பதிவு செய்யக்கூடிய தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைத்தொலைபேசியில் பதிவு செய்யப்படும் காணொளி (Mobile Video) மூலம் குழந்தையின் எடை, உயரம், தலைச் சுற்றளவு மற்றும் மார்புச் சுற்றளவு உள்ளிட்ட முக்கிய உடல் அளவீடுகளை துல்லியமாகக் கணக்கிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி, குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிப்பதிலும் சுகாதாரப் பதிவுகளை முறையாகப் பராமரிப்பதிலும் சுகாதாரத் துறையினருக்கு பெரிதும் உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் குறைவாகக் காணப்படும் பகுதிகளில் குழந்தைகளின் சுகாதார நிலையை விரைவாக மதிப்பிடுவதற்கான ஒரு பயனுள்ள கருவியாக இந்த செயலி அமையும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
குழந்தை சுகாதாரப் பராமரிப்பில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய AI செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.