ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன மோசடி; ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் நம்பப்படும் மோசடி, ஊழல் மற்றும் நிர்வாக முறைகேடுகளை விசாரணை செய்யும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விசேட விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இந்த விசேட குழுவினரை சந்தித்த ஜனாதிபதி, கடந்த 2010 முதல் 2025 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் நடவடிக்கைகள், நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் விமான சேவை பாதுகாப்பு செயல்முறைகளில் இடம்பெற்றதாக நம்பப்படும் பல்வேறு தவறுகள் தொடர்பில் விரிவான விசாரணையை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் K.N.M. குமாரசிங்க, இந்த குழுவின் செயலாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிகார துஷ்பிரயோகம், சட்டவிரோத சலுகைகள், சேவை ஒப்பந்தங்களில் முறைகேடுகள், விமான பாதுகாப்பு மற்றும் கொள்முதல் செயல்முறைகளின் குறைபாடுகள், வெளிநாட்டு விற்பனை முகவர்கள் வழியாக நிகழ்ந்த சந்தேகத்துக்குரிய கொடுக்கல் வாங்கல்கள், முன்னைய J.C. வெலியமுன குழு மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட தவறுகள் என்பவற்றை இந்த குழு ஆராயவுள்ளது.
இந்த விசாரணை மூலம் பொறுப்புக்கூற வேண்டிய தரப்புகள் அடையாளம் காணப்பட்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற ஊழல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன.