வரலாற்றில் இதுவரையில் இப்படியொரு கூட்டம் நடந்ததில்லை!
யாழ்ப்பாணத்தில் தனியார் விருந்தினர் விடுதியொன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் (Rauff Hakeem) தலைமையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டம் இன்று (02/11/2021) யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணம் திண்ணையில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த கூட்டத்தில் ‘ஒரே நாடு - ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி - ஒற்றுமை இன்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நிராகரிப்பது என்பது உட்பட இன்னும் சில முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

இக்கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்,(Mano Ganesan) தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், (D. Siddarthan) தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்(Selvam Adaikalanathan) மற்றும் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், (Suresh Premachandran) மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் நாயகம் முன்னாள் நீதியரசர், பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் சார்பில் பேராசிரியர் சிவநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கை வரலாற்றில் இதுவரையில் இப்படியொரு கூட்டம் நடைபெற்றதில்லை எனவும் இரு இனங்களினதும் இத்தனை தலைவர்கள் இணைந்ததில்லை எனவும் இத்தனை பேர் இருக்க இரு முஸ்ஸிம்க்கு தலைமையை கொடுத்ததில்லை என அரசியல்வாதி ஏ.எல்.தவம் தெரிவித்துள்ளார்.