உலகை உலுக்கிய நேபாள பேரழிவு; 1,643 மாணவர்களின் உயிர்காத்த ஆசிரியர்!
இயற்கையின் சீற்றத்தால் நேபாளத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கின் போது, ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் காட்டிய துரிதமான மற்றும் சாதுரியமான செயலால் 1,643 மாணவ-மாணவிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தின் தாதிங் (Dhading) மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பஞ்சகன்னியா இடைநிலைப் பள்ளியில் (Shree Panchakanya Secondary School) இந்த வீரம் மற்றும் அர்ப்பணிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு நொடி தாமதித்திருந்தாலும் பெரும் உயிர்ச்சேதம்
பள்ளி வகுப்புகள் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அருகில் உள்ள ஆற்றில் நீர்மட்டம் அபாயகரமான அளவில் உயர்ந்து கொண்டிருப்பதை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேஷ் குமார் ஷ்ரெஸ்தா (Ganesh Kumar Shrestha) கவனித்தார்.
நிலைமையின் தீவிரத்தை உடனடியாக உணர்ந்த ஆசிரியர் , சற்றும் தாமதிக்காமல் பள்ளி மணி அடித்து உடனடியாக அனைத்து வகுப்புகளையும் இடைநிறுத்தம் செய்ய உத்தரவிட்டார்.
அப்பகுதியில் வழக்கமான தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் செயலிழந்த போதிலும், தலைமை ஆசிரியர் தனது ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து ஒரு கட்டமைப்புமிக்க அவசரகால மீட்புக் குழுவை அமைத்தார்.
வெள்ள நீர் பள்ளி வளாகத்தைச் சூழ்ந்து கொள்வதற்குள், அனைத்து மாணவர்களையும் வரிசையாக அருகிலுள்ள உயரமான மலைப்பகுதிக்கு மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்று தங்க வைத்தார்.
அவரது இந்தத் துரிதமான முடிவால், சில நிமிடங்களிலேயே பள்ளி வகுப்பறைகளுக்குள் பல அடி உயரத்திற்குச் சீறிப்பாய்ந்த வெள்ள நீரிலிருந்து 1,643 குழந்தைகளும் எவ்வித காயங்களுமின்றி உயிர்தப்பினர்.
அதேசமயம் ஒரு நொடி தாமதித்திருந்தாலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் சூழலில், சுயநலமின்றிச் செயல்பட்டு அத்தனை குழந்தைகளின் உயிரையும் காத்த தலைமை ஆசிரியருக்கு நேபாள அரசு மற்றும் சமூக வலைதளங்களில் பாராட்டு மழை குவிந்து வருகின்றது.
அதேவேளை நேபாள வெள்ளத்தில் சிக்கி இதுவரை 903 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4247 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாள அரசாங்க்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.