நீர்கொழும்பு துப்பாக்கிசூட்டு சம்பவம்; இருவர் கைது
நீர்கொழும்பு நீதிமன்றம் முன்பாக ஓகஸ்ட் 31 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள், வழக்கு விசாரணைக்கு வந்திருந்த ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு தப்பி தப்பியோடிய நிலையில், இருவர் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு குட்டிதூவ பிரதேசத்தில் இன்று (05) பிற்பகல் ஒரு மணியளவில் சந்தேகநபர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களின் துப்பாக்கி சூட்டில் கட்டுவெல்லேகம சுரேஷ் என்பவர் படுகாயமடைந்து நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் , சம்பவத்தில் , வீதியில் சென்று கொண்டிருந்த ஒருவரும் காயமடைந்தார்.
கைத் துப்பாக்கி, ஐந்து ரவைகள், கைக்குண்டு மீட்பு
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து கைத் துப்பாக்கி, ஐந்து ரவைகள், கைக்குண்டு ஒன்றும், சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும், இரண்டு செல்லிடத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.
ரணில் பிரபாத் ரூப சிங்க என்பவரே கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் மினுவாங்கொட உன்னாருவ பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், மற்றைய சந்தேக நபர் முத்துவெல கலன் மிதுனுவேவ பிரதேசத்தை சேர்ந்த முத்துநாயக்க கெதர பிரியன்த்த சிசிர குமார என்பவராவார்.
அத்துடன் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பிரதான காரணம் காதல் பிரச்சினை மற்றும் போதை பொருள் பிரச்சினை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைதான சந்தேக நபர்களை நாளை (06) நீதிமன்றில் ஆஜர் செய்ய உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.