நீர்கொழும்பு சிறை மோதல் ; 24 பேரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியீடு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறை மோதலின்போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மீது மிகவும் கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தமை, பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மரணப் பரிசோதனை அறிக்கைகளின்படி, தலைப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயங்களே சில அதிகாரிகளின் உயிரிழப்பிற்குக் காரணமாக இருந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட 24 பேரின் பிரேதப் பரிசோதனைகள், மருத்துவர் சுஜீவ விக்ரமநாயக்க தலைமையிலான ஐந்து பேர் கொண்ட விசேட நீதிமன்ற மருத்துவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனை முடிவுகளின்படி, 14 பேர் துப்பாக்கிச் சூட்டு காயங்களாலும், 9 பேர் கொடூரமான தாக்குதல்களாலும் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், ஒருவரின் மரணம் தொடர்பான இறுதி தீர்ப்பு இதுவரை வெளியிடப்படாமல் திறந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை காவலர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான தகவல்கள் இன்று (09) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவருக்கான மரணப் பரிசோதனை தொடர்பான சாட்சியங்களும் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த 28 சடலங்களில் 24 பேரின் பிரேதப் பரிசோதனைகள் நிறைவடைந்து, அவை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள நான்கு சடலங்களுக்கான பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த நால்வரில் இந்தியப் பிரஜை ஒருவரும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலனி பெரேரா கடந்த 7 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
மேலும், சம்பவம் குறித்த விரிவான அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னர் நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகம் தற்போது குற்றக் களமாகக் கருதப்படுவதால், அங்கு கைதிகளை தொடர்ந்து தங்கவைத்திருப்பது பொருத்தமற்றது என சிறைச்சாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வன்முறைச் சம்பவத்தால் சிறைச்சாலை வளாகத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான இறுதி மதிப்பீட்டு அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லை என்றும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.