வேப்பங்கொட்டையால் விபரீதம் ; பாடசாலை மாணவிகளின் மரணத்தால் சோகத்தில் தவிக்கும் கிராமம்
தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே வாழவந்தாள்புரத்தில் வேப்பங்கொட்டை சேகரிக்க சென்ற சகோதரிகள் மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழவந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த நூருல் அமீன் என்பவரின் மகள்கள் செய்யது அஸ்பியா பானு (13), சபிக்கா பானு (9) நேற்று (23) ஊருக்கு வெளியே உள்ள வேப்பமரத்தடியில் தாயாருடன் வேப்பங்கொட்டை சேகரிக்க சென்றுள்ளனர்.
மின்னல் தாக்கி பலி
ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் வெயில் கொளுத்தி வந்த நிலையில், மதியம் திடீரென மழை மேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது.
அப்போது, மரத்தடியில் நின்ற அக்கா, தங்கை மீது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியாகினர்.
தகவல் அறிந்த சத்திரக்குடி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று, இருவரின் உடல்களையும் மீட்டு ராமநாதபுரம் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் உயிர்கள் மின்னல் தாக்கி பலியான சம்பவம், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.