தெற்கு ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் கடற்படையினரால் மீட்பு
இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பலநாள் மீன்பிடிப் படகில் திடீர் சுகவீனமடைந்த மீனவர் ஒருவர், கடற்படையினரின் துரித நடவடிக்கையால் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த மீனவர் இன்று (16) காலை ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

முதலுதவி
ஐந்து மீனவர்களுடன் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஒக்டோபர் 3ஆம் திகதி கடலுக்குச் சென்ற ‘Mary 02’ என்ற பலநாள் மீன்பிடிப் படகு, ஹம்பாந்தோட்டையிலிருந்து சுமார் 546 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நோய்வாய்ப்பட்ட மீனவர் முதலில் ‘BW Helios’ என்ற வர்த்தகக் கப்பலில் பாதுகாப்பாக ஏற்றப்பட்டார்.
பின்னர், கடற்படையின் P 411 அதிவேகப் படகு மூலம் அவரைக் கரைக்கு அழைத்து வந்து ஆரம்பகட்ட முதலுதவி வழங்கியதுடன், வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்.