தமிழர் பகுதியில் ஏலக்காயுடன் வந்த இருவருக்கு கடற்படையினர் காட்டிய அதிரடி
கற்பிட்டி, கீரிமுந்தலம் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட பெருந்தொகையான ஏலக்காயுடன் இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 31ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான விஜய கப்பல் அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

மேலதிக சட்ட நடவடிக்கை
சந்தேகத்திற்குரிய வகையில் பயணித்த டிங்கி படகு ஒன்றை வழிமறித்து சோதனையிட்ட போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 98 கிலோகிராம் ஏலக்காய் கண்டறியப்பட்டது.
இதன்போது, கைது செய்யப்பட்டவர்கள் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 41 வயதுடைய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஏலக்காய் இருப்பு, டிங்கி படகு மற்றும் சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.